“பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, ...பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணினீர்.” – சங்கீதம் 8:2
மேரி இராணி இங்கிலாந்தை அரசாண்ட காலத்தில் கோல்ஸ்டர் என்ற இடத்தில் ரோஸ்ஆலன் வாழ்ந்து வந்தாள். அவள் பெற்றோரும் அவளும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்களை சிறையில் அடைத்து அவர்களுக்கு மரணதண்டனை வழங்கி வந்தார் மேரி இராணி. ஆனால் ரோஸ் ஆலனின் குடும்பத்தினர் ஆண்டவருக்காக துணிவுடன் வாழ்ந்தனர். ஒரு நாள் அவள் பெற்றோர் ஜெபக் கூட்டத்திற்குச் சென்று வந்த போது அவர்களை கவனித்து விட்ட பேலிட் தன் ஆட்களுடன் நள்ளிரவு 2 மணிக்கு சிறைக்கு அழைத்துச் செல்ல வந்தார். அப்போது தன் தாய்க்கு தண்ணீர் மொள்ள வந்த ரோஸ் ஆலனிடம் பேலிட் "சிறுபெண்ணே எப்படியாகிலும் உன்னுடைய பெற்றோர் இயேசுவை மறுதலிக்கும்படி செய்" என்றான். அதற்கு அவள் "என்னைக் காட்டிலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை சரியாய் நடத்துவார்" என்றாள். உடனே அவன் கோபங்கொண்டவனாய் "நீயும் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவளா? உன் பெற்றோருடன் நீயும் மரிக்க விரும்புகிறாயா?" என்றான். அவள் "தேவன் என்னை அதற்கென்று அழைப்பாரானால் அதற்கான பெலனையும் தருவார்" என்றாள். அவன் மூர்க்கமடைந்தவனாய் அவளது தோல் வெடிக்கும்வரை அவள் கைகளை அழுத்தினான். அவள் தேவனுக்கு ஸ்தோத்திரம் என்றாள். ரோஸை கெட்ட வார்த்தைகளால் திட்டி மரணதண்டனை நிறைவேற்ற தெரு வழியாய் அழைத்துச் சென்றான். அவள் தேவனைப் பற்றி அறிவித்துக் கொண்டே சென்றாள். தேவனை நோக்கிக் கூப்பிட்டவளாகவே மரித்தாள்.
ரோஸ் ஆலன் 16வயது நிரம்பிய சிறு பெண்தான். அவளுக்குள் எப்படி இப்படிப்பட்ட முதிர்ச்சியும் வைராக்யமும் வந்திருக்கக்கூடும்? முதலாவது குழந்தைகளின் வாயினால் பெலன் உண்டு பண்ணுகிற தேவகிருபையே! (சங். 8:2). இரண்டாவது, பெற்றோர் தங்கள் வாழ்க்கையில் எதை மையமாக வைத்து வாழ்கிறார்களோ பிள்ளைகளும் அதையே முக்கியமானதாய் கருதுவர். நாம் பொருளாசைக்கும் உலக அந்தஸ்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தால், நம் பிள்ளைகளும் அப்படியே உலகத்தாரைப் போலவே இருப்பார்கள். நாம் தேவனுக்கு பிரியமானதை தேடுகிறவர்களாயிருப்போமானால் நம்முடைய பிள்ளைகளும் அப்படியே இருக்க அதிக வாய்ப்புண்டு. அதுவே அவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்கும்.
- Mrs. ஜோதி ஸ்டாலின்
Comments
Post a Comment