ஆ. திருமுருகன்
கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் புத்தாண்டு என்றாலே புத்துணர்வுடன் அநேக புதிய காரியங்களை மற்றும் புதிய துவக்கங்களை நாடித் திரிய ஆரம்பித்துவிடுகிறார்கள். மனம்போன போக்கிலுள்ள களியாட்டுக்களும் கொண்டாட்டங்களும் ஒருபுறம் இருக்க, புத்தாண்டை வெவ்வேறு கோணங்களில் சிந்தித்து சித்தரிக்கிற எண்ணற்ற கிறிஸ்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு புது வருட வாக்குத்தத்த செய்தி மற்றும் வாக்குத்தத்த அட்டை என வாஞ்சித்து நாடுவோரின் எண்ணிக்கைத்தான் எத்தனை!
“புது”, “புதிது” மற்றும் “புதிய” போன்ற வார்த்தைகள் வேதாகமத்தில் எங்கு வந்தாலும் உடனே அதை எடுத்துக்கொண்டு, புது வருடத்திற்கான வாக்குத்தத்த செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் இன்றைய கிறிஸ்தவ போதகர்கள். உதாரணத்திற்கு, “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்” என்று வெளி. 21:5-ல் வாசிக்கிற வசனத்தை எடுத்துக்கொண்டு எண்ணற்ற பிரசங்கியார்கள் பிரசங்கித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். யார்? எங்கே? எதற்காக கூறினார்கள்? என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. மேற்க்கூறிய வார்த்தைகள் பிதாவிடமிருந்து வந்தாலும் அல்லது பிசாசிடமிருந்து வந்தாலும் அதிலிருந்து கொடுப்பது என்னவோ புது வருட வாக்குத்தத்த செய்திதான் என்பதில் மறுப்பில்லை.
“வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோத்தேயு 3:16-17) என்று உரைக்கிற காரியம் முழு வேதாகமத்தையும் குறிக்கிறதாக இருக்கிறது மற்றும் எல்லா நாட்களுக்கும் இவைகள் பொருந்துகிறதாக இருக்கிறது. அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் அதனுடைய சந்தர்ப்பம் மற்றும் கூறப்பட்ட பின்னணியை பொருட்படுத்தாமல் அவற்றை பிடுங்கி எடுத்து கர்த்தர் உங்களுக்கு இந்த புதிய வருடத்தில் கொடுக்கும் வாக்குத்தத்தம் இதுதான் என்று கூறுவது எவ்விதத்தில் நியாயமாகும்?
“ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்” (ரோமர் 14:5). நாம் வேதாகமத்தை ஆழ்ந்து ஆராய்வோமானால், எந்த ஒரு குறிப்பிட்ட நாளிலும் மற்ற நாட்களிலில்லாத ஒரு விசேஷத்தித அமானுஷ்ய வல்லமை என்று ஒன்றில்லை. எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், ஆம் நமக்கு தேவன் கொடுக்கிற அனைத்து நாட்களும், வாரங்களும், மாதங்களும் மற்றும் வருடங்களும் நமக்கு புதியவைகள்தான். “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” (சங்கீதம் 118:24) என்று சங்கீதக்காரன் கூறுகிற காரியம் கர்த்தர் உண்டுபண்ணுகிற மற்றும் நமக்கு அளித்திருக்கிற எல்லா நாட்களுக்கும் பொருந்தும்.
ஆகவே, மெய்யான புத்தாண்டு என்பது ஏதோ நாம் ஒரு குறிப்பிட்ட அதீத ஆவிக்குரிய உச்சநிலையை அடையும் ஒருவகையான விசேஷித்த அனுபவத்தை கொடுக்கும் நாளோ அல்லது தேவன் நமக்கு ஆசிர்வாதத்தை வாரி வழங்கும் ஒரு அற்புதமான நாளோ அல்லது நாம் எந்த காரியத்தை அன்று துவங்கினாலும் அது ஜெயமாகவே முடியும் வகையில் ஏதோ ஒரு அமானுஷ்ய வல்லமையுள்ள ஒரு நாளோ அல்ல மாறாக நாம் தேவனை மென்மேலும் அறிந்து அவரோடு நெருங்கி வாழும்படிக்கு அனுதினமும் வாஞ்சிக்கும் எல்லா நாட்களையும்போல ஒரு நாள் மட்டுமேயாகும். புதிதாக வேண்டியது வெறுமனே நமது உடைகளோ வீட்டுச்சுவரின் வர்ணமோ அல்ல மாறாக நம் மனது. அது புதிதாகும்பொழுதுதான் நம்மைக்குறித்த தேவனுடைய சித்தமும் நிறைவேருகிரதாய் இருக்கிறது. இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுலும், “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (ரோமர் 12:2) என்று நமக்கு அறைகூவல் விடுக்கிறார்.
ஆதலால் பிரியமானவர்களே, தேவன் நமக்கு 2020 என்னும் மேலும் ஒரு வருடத்தைக் கொடுத்திருக்கிறபடியினாலே, நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் தொலைவில் உள்ளது என்பதை அறிந்து, அப்போஸ்தலனாகிய பவுலோடு சேர்ந்து நாமும், “நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலிப்பியர் 3:12-14) என்று நல்லதொரு தீர்மானம் எடுத்தது போல ஜனவரி முதல் தேதியென்றில்லாமல், உங்களுக்கு தேவன் அளித்திருக்கிற எல்லா நாளிலும் விசேஷமாய் இந்த புத்தாண்டின் நாட்களில் நீங்களும் எடுத்து உங்கள் இலக்கை நோக்கித் தொடருங்கள். தேவன் தாமே இந்த 2020-ஆம் ஆண்டில் இப்படியொரு புரிந்துகொள்ளுதலோடும் நல்லதொரு தீர்மானத்தோடும் நீங்கள் பயணிக்க உதவி புரிவாராக! ஆமென்.
Comments
Post a Comment