“...என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.” – வெளி. 2:13
நம் தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மாவட்டம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது திருநெல்வேலிதான். அப்பகுதியின் முதல் பெண் இரத்த சாட்சி நாகம்மாள் ஆவார். 18ம் நூற்றாண்டிலிருந்தே அப்பகுதியில் நற்செய்தி பரவ ஆரம்பித்தது. கிழக்கிந்திய வர்த்தகக் குழுவின் குருவான ஜேம்ஸ் ஹாப் அவர்கள் பாளையங்கோட்டையில் தங்கி ஊழியம் செய்ய ஆரம்பித்தார். ஸ்ரீவைகுண்டத்தின் அருகிலுள்ள திருபுளியங்குடி (TPகுடி) யிலுள்ள நம்பி என்ற விவசாயியின் மூன்று பிள்ளைகளில் இளையவன் சுப்பிரமணி வேலை நிமித்தமாக ஸ்ரீவை போகும்போது தெருப்பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் ஒரு உபதேசியார். பிரசங்கம் முழுவதையும் கேட்டு விட்டு ஒரு நற்செய்தி நூலையும் வாங்கிக் கொண்டான். வீட்டிற்கு வந்து தாயாரிடம் நாம் வணங்கும் தெய்வமெல்லாம் நம்மிடம் "அது, இது" என கேட்கிறது. ஆனால் இந்த தெய்வமோ உயிரையே நமக்காக கொடுத்திருக்கிறார். "சொர்க்கம் செல்ல ஒரே வழி இயேசுகிறிஸ்துதானாம்" என்றான். நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் கையிலுள்ள யோவான் சுவிசேஷத்தை வாசித்து வீட்டிலுள்ளவர்களிடம் பகிர்ந்து கொண்டான். இதன் விளைவாக 24 கி.மீ. நடந்தே சென்று ஜேம்ஸ் ஹாப் போதகரை சந்தித்தனர். பின் பணிமாற்றம் காரணமாக ரேனியஸ் ஐயர் அங்கு வந்தார். நம்பி குடும்பத்தார் வாரம் இரண்டு முறை நடந்தே போதகரிடம் வந்து வேதபாடங்களை கற்று வந்தனர்.
இந்த குடும்பத்தார் வேதக்காரராகப் போகிறார்கள் என்பதை அறிந்த அந்த ஊர் மக்கள் இவர்களை ஊரை விட்டு விரட்ட தீர்மானித்தனர். அவர்கள் வீட்டையும் தாக்கினர். ஒருநாள் ரேனியஸ் ஐயரிடம் ஞானஸ்நானம் பெற்று திரும்பியபோது ஊர்மக்கள் அவர்களை கடுமையாக தாக்கினர். அடிதாங்காமல் நம்பியின் மனைவி நாகம்மாள் சுருண்டு விழுந்தார். சுயநினைவு இல்லாமல் சில நாட்கள் இருந்து மரித்து விட்டார். நெல்லை பகுதியில் விதைக்கப்பட்ட முதல் கோதுமை மணி இவர்தான். நம்பியும் பிள்ளைகளும் உடல்நலம் தேறினர். இதனிமித்தம் ஊர் மக்களை பகைக்காமல் பரிவுடனும் பாசத்துடனும் நடந்து கொண்டனர். இது ஊர் மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. ரேனியஸ் ஐயர் மூலம் அங்கு ஒரு பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. பின் ஒரு ஆலயமும் கட்டப்பட்டு, இப்போது அங்கு 60க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. நாகம்மாளின் மரணம் ஒரு முடிவல்ல, அது அந்த கிராமமே மெய்யான ஒளியை கண்டு கொள்ள வாசலாய் அமைந்தது.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் நண்பரே! அன்று சுப்பிரமணியன் என்ற வாலிபன் இயேசுகிறிஸ்துவை பற்றி அறிந்து கொள்ள வாரம் இருமுறை 48 கிமீ வரை நடந்தார். இன்று ஆண்டவருக்குள் வளர அநேக வசதி வாய்ப்புகளும் முழு வேதாகமமும் நம்மிடம் இருந்தாலும், ஆண்டவரை இன்னும் கிட்டிச் சேர, பாடுகள் சகிக்க நாம் என்ன முயற்சி எடுக்கிறோம். யோசித்துப் பார்ப்போம்.
- Mrs. எபன் சந்தோஷ்
Comments
Post a Comment