“...மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்...”
*• (மத்தேயு 7:12).*
நாம் அநேக நேரங்களில் பிறரிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டேதான் வாழ்கிறோம். கடுகு முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்திலும் பிறருக்கு உதவினால், அவர்களிடமிருந்து வேறு உதவியை எதிர்பார்க்கிறோம். உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டிலுள்ள அனைவரும் நம்மை விசாரித்து, கவனிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இதுபோல பிறரிடம் எதிர்பார்க்கும் காரியங்களை பட்டியலிட்டால் அது கணக்கிலடங்காது. ஆனால் கிறிஸ்துவை வெளிக்காட்ட வேண்டிய நம்முடைய சுபாவம், இப்படி உலக மக்களைப் போல இருக்கக்கூடாது. பிறர் நமக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அவைகளை நாம் செய்ய அழைக்கப்படுகிறோம்.
ஆனால் அநேக நேரங்களில் நம் மனநிலை வேறுவிதமாகவே காணப்படுகிறது. என்னை என் உடன்பிறந்தோரோ, உறவினரோ விசாரிப்பதில்லை. ஒரு ஃபோன் கூட பண்ணுவதில்லை என்று புலம்புவதுண்டு. நம்மை விசாரிக்க வேண்டும் என்று விரும்பும் அந்த நபருடன், நாம் ஏன் முதலில் தொடர்பு கொண்டு விசாரிக்கக் கூடாது, இன்னும் சிலர் தங்களது குடும்பத்தார் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பர். ஆனால் தன்னால் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று துளியும் யோசிப்பதில்லை. பிறரிடமிருந்து உதவியை எதிர்பார்க்கும் நாம் பிறருக்கு உதவுவதில் ஏன் முந்திக் கொள்வதில்லை?
நம் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் நம்மை நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும், நம்மிடம் ஆலோசனை கேட்க வேண்டும், விசாரிக்க வேண்டும், உதவ வேண்டும் என்று எவையெல்லாம் விரும்புகிறோமோ அவைகளையே அவர்களுக்கும் செய்ய முந்திக்கொள்வோம். இதன் மூலம் அன்றாட வாழ்வில் ஆனந்தம் நிச்சயம் அதிகரிக்கும். மற்றவர்களைக் குறித்த கசப்புகள் மாறும், உறவுகள் வலுப்படும், மன உளைச்சல் போய் மனநிறைவும் மகிழ்ச்சியும் பெருகும்.
அன்பானவர்களே! மேற்கண்ட வசனத்தின்படி வாழ இன்றே துவங்குவோம். இந்த சிறிய துவக்கம் எவ்வளவு பெரிய சமாதானத்தை நம் உள்ளத்திற்கு தருகிறது என்பதை கவனித்தால் அது நிச்சயம் பெரிய ஆச்சரியமாயிருக்கும். முடிந்தால் மேற்கண்ட வசனத்தை எழுதி வீட்டு அறையில் ஒட்டலாம். ஆம், நாம் கிறிஸ்துவை பிரதிபலிக்கவே அழைக்கப்பட்டுள்ளோம் என்ற சிந்தை நம்மை நிரப்பட்டும்.
Comments
Post a Comment